Tag Archives: ஸ்வான்.

ஸ்பெக்ட்ரம் எனும் கூட்டுக்கொள்ளை

20 நவ்

2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் நாட்டையே உலுக்கி வருகிறது. இந்தியா இதுவரை காணாத பெரும் தொகை இழக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களைத் திருப்திப்படுத்த தேசத்துக்கு நஷ்டம் விளைவிக்கும் அளவுக்கு துணிந்திருக்கிறார்கள் அதிகாரத்திலுள்ளோர். ‘வெள்ளையர் காலத்திலும் நடந்திராத கொள்ளையாக அல்லவா இருக்கிறது’ என நடுநிலையாளர்கள் மனம் கொதித்துப் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2 ஜி விவகாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தைச் சரிகட்டும் வகையில், குறைவான தொகைக்கு உரிமம் பெற்ற அத்தனை நிறுவனங்களிடமும், இன்றைய மார்க்கெட் ரேட்டை வசூலிக்க அரசு அதிரடியாக முடிவு செய்துள்ளது.

ஒரு வேளை இது நடந்தால், பலரும் கவனிக்காமல் விட்ட ஒரு கேள்வி விசுவரூபம் எடுக்கும்.

அது… இந்த 2 ஜி உரிமத்தை அடிமாட்டு விலைக்கு வாங்க தனியார் நிறுவனங்கள் கொடுத்த பல ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம்!

அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்படுவதற்காகக் கொடுக்கப்பட்ட பல ஆயிரம் கோடி லஞ்சப் பணம்!!

இந்தப் பணத்தை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் எப்படி திருப்பி வசூலிக்கப் போகின்றன? துறைக்குப் பொறுப்பானவர்கள், ஒதுக்கீடு செய்தவர்களின் சட்டையைப் பிடித்து திரும்ப எடுத்து வையுங்கள் அந்தப் பணத்தை என்று கூற முடியுமா…

இதனை எப்படி வெளிக் கொண்டுவர முடியும்? என்ற கேள்வி எழலாம். அரசு மனது வைத்து நேர்மையான விசாரணையை மேற்கொண்டால், வெளிக்கொணர முடியும். ஒரு வகையில் இந்தப் பணம் மொத்தமும் கணக்கில் வராத கறுப்புப் பணம். நியாயமாக அரசுக்கு சேர வேண்டிய பணம். அதை எப்போது அரசு கையகப்படுத்தப் போகிறது?

விசாரணை என்ற கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றி, இந்த லஞ்சப் பண விவகாரத்தை அப்படியே கண்டுகொள்ளாமல் விடும் பட்சத்தில், இந்தத் தனியார் நிறுவனங்கள் திருடனுக்கு தேள்கொட்டிய மாதிரி வாய் மூடி மவுனம் சாதித்து, பொருத்தமான தருணத்தில் மீண்டும் காரியம் சாதித்துக் கொள்ளப் போகும் அபாயமும் இதில் உள்ளது!

எனவே இந்த ஊழல் முன்னிலும் பல மடங்கு அதிகமாக நடக்க வாய்ப்பு ஏற்பட்டுவிடும். எனவே தவறு செய்தவர்கள் யார் என்று கண்டுபிடிப்பதோடு, இந்த தவறைச் செய்ய கைமாறிய பெரும் தொகையைக் கண்டுபிடித்து வெளிக் கொணர்வதும் அவசியம்.

கட்சி சார்பற்ற பார்வை கொண்டவர்களுக்கு இன்னமும் கூட சின்ன நம்பிக்கையைத் தந்துவரும் டாக்டர் மன்மோகன் சிங் அரசு, செய்யுமா இதை?

*********************************************************

ஸ்பெக்ட்ரம் ஊழலை எல்லோரும் இப்படித்தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள், தனிப்பட்ட ஒருவரோ ஒரு கட்சியோ செய்த ஊழல் என்று. ஆனால் உண்மையில் இது கூட்டுக்கொள்ளை.

இந்த ஊழல் குறித்த முழு விபரங்களையும், அது எப்படி கூட்டுக்கொள்ளையாக இருக்கிறது என்பதையும், இதுபோன்ற ஊழல்கள் நடப்பதன் கார்ணம் என்ன என்பதையும், வருங்காலத்தில் இதுபோன்ற ஊழல்களை எப்படி தடுக்கலாம் என்பதையும் மிகத்தெளிவாக விளக்குகிறது இந்தக்கட்டுரை.

ஸ்பெக்ட்ரம் ஊழல்: மறுகாலனியாக்கத்தின் பம்பர் பரிசு