Tag Archives: மர்மக் காய்ச்சல்

இன்னும் எத்தனை உயிரை இழக்க வேண்டும்?

26 பிப்

நேற்று [24.02.2016] கடையநல்லூர் புதுத்தெருவில் வசிக்கும் 19 வயது மாணவன் மர்மக் காய்ச்சலுக்கு பலியானான் எனும் செய்தியை செவியுற்ற போது இப்படித் தான் மனம் எண்ணியது, “இன்னும் எத்தனை பேர் பலியாக வேண்டும்?” ஒரு நெடுங்கதை தொடர்வது போல் ஒவ்வொரு ஆண்டும் இப்படி மரணங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இப்படி மரணம் நிகழ்ந்தவுடன் நகரில் குப்பை கூழங்கள் பெருகி விட்டன, கால்வாய்கள் சாக்கடையாகி விட்டன, மனிதக் கழிவுகள் ஆற்றில் கலக்கப்படுகின்றன என ஏதேதோ காரணங்கள் கூறுவதும் வழக்கமாகி இருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்ற ஒரு காய்ச்சல் பொழுதில் இத்தளத்தில் எழுதப்பட்ட ஒரு குறிப்பை இங்கு மீள்பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும் என எண்னுகிறேன்.

கடையநல்லூரின் கழிவுகள் அகற்றப்படுவதற்கு இரண்டு கால்வாய்கள் இருந்தும், அவை இரண்டுமே பராமரிக்கப்படாமல் சாக்கடைகளாகிவிட்டன. மட்டுமல்லாது ஆக்கிரமிப்புகளும் அந்தக் கால்வாய்களை தோற்றத்திலும் கூட சாக்கடைகளாக உருமாற்றிவிட்டன. சுகாதாரக்கேடு என்று மக்களை மட்டும் குற்றம்சாட்டுவதில் பொருளில்லை. ஏனென்றால், அரசு மருத்துவமனையிலேயே மருத்துவக் கழிவுகளை கால்வாயில் தான் கொட்டுகிறார்கள். மனிதக் கழிவுகளை கால்வாயில் கலப்பது சுகாதார சீர்கேடுதான் என்றாலும், ஒட்டுமொத்தக் காரணத்தையும் அதன் தலையில் சுமத்துவது மெய்யான காரணத்தை மறைப்பதற்காகத்தான். பத்தாண்டுகளுக்கு முன்புவரை பெரும்பாலான மக்கள் திறந்தவெளியையே கழிப்பிடமாக பயன்படுத்தி வந்தனர். பலரை மரணத்தில் தள்ளக்கூடிய மர்ம நோய்கள் எதுவும் அன்றைய காலங்களில் பீடித்ததில்லை. இன்று பெரும்பாலான வீடுகளில் நவீன கழிப்பறைகள் இருந்தும், திறந்தவெளிகளெல்லாம் மறிக்கப்பட்டு கட்டணக் கழிப்பிடங்களாக மாற்றப்பட்ட பின்பும் புதுப்புது நோய்கள்.

நகராட்சி பெருகும் மக்களுக்கு ஏற்ப சுகாதாரத்திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. யாராவது தலைவர்கள் வந்தாலோ, அல்லது இதுபோன்ற நோய் பீடிக்கும் நேரங்களிலோ சுண்ணாம்பு கலந்த பிளீச்சிங் பொடியை தூவி விடுவதும், எப்போதாவது கொசு மருந்து அடிப்பதும் தான் பெரிய அளவிலான சுகாதார நடவடிக்கைகள். சுகாதாரத்திற்கென எந்த திட்டமிடாமலிருப்பதும், கால்வாய்களை பராமரிக்காமல் நீர் தேங்கவிட்டு ஊரையே சாக்கடையாக்கியிருப்பதும் தான் மெய்யான காரணம்.

அப்படி என்ன தான் பிரச்சனை கடையநல்லூரில்? கடையநல்லூர் மட்டுமே அசுத்தமாக இருக்கிறது என்று யாராலும் கூற முடியாது. நீர்நிலைகளை பராமரிப்பிலிருந்து அரசு என்று விலகிக் கொண்டதோ அன்றிலிருந்தே எல்லா ஊர்களிலும் உள்ள அனைத்து நீர்நிலைகளும் சாக்கடைகளாக மாறி விட்டன. நகர் நிர்வாகம் தனியார்மயமாகியதும், நகர் மன்றம் என்பது ஊழலை பிழைப்புவாதத்தை பரவலாக்குவதும் தான் என்றான பின் நகரின் மீதான, நகர மக்களின் மீதான அக்கரை என்பதை எதிர்பார்க்க முடியுமா? நகர நிர்வாகங்கள் சீரழிந்து போய் ஊழலை கீழ்மட்டம் வரை பரவலாக்குவது என்பது எல்லா இடங்களிலும் இருக்கும் பொதுவான அம்சம் என்றாலும் கடையநல்லூரில் ஆண்டுதோறும் கோடைகாலத் தொடக்கங்களில் தவறாமல் அந்த மர்மக் காய்ச்சல் வந்து சிலரைக் கொன்று செல்வதின் தனிச் சிறப்பான காரணம் என்ன? கடையநல்லூரின் இந்த குறிப்பான நிலமைக்கு நகர் நிர்வாகச் சீர்கேடு என்ற பொதுவான காரணத்தை கூறி விலகிச் செல்ல முடியுமா? யார் பொறுப்பேற்பது? யார் விளக்குவது?

எனவே, பொதுவான காரணங்களைக் கூறி கடையநல்லூரின் குறிப்பான பிரச்சனையை தள்ளிவைக்க முடியாது. ஆண்டு தோறும் கடையநல்லூரைத் தாக்கும் இந்த மர்மக் காய்ச்சலுக்கு தனிப்பட்ட காரணம் ஏதோ இருந்தாக வேண்டும். அந்தக் காரணத்தை கண்டறிந்து களையாத வரை கடையநல்லூரின் தொடர் உயிரிழப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட மாட்டாது. இதை கண்டறிந்து நீக்குவதை வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபடாதவரை அரசின் கடையநல்லூர் நகராட்சியின் செவிட்டுச் செவிகளில் இது ஏறப் போவதில்லை. அப்படியான சமரசமற்ற போராட்டத்துக்கு மக்களே நீங்கள் தயாரா? இதற்கு பதில் கூறாமல் உயிரிழப்புகளை கண்டு இரக்கப் பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை.

கடையநல்லூரில் மீண்டும் பரவும் மர்மக் காய்ச்சல்

2 பிப்

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் கொசு, சாக்கடை, குப்பை, கூளங்கள் போன்ற சுகாதார பிரச்னைகளால் 2009ம் ஆண்டு மர்மக் காய்ச்சல் பரவி 5 குழந்தைகள் உட்பட 35 பேர் பலியாயினர். நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து மதுரை, சென்னை, பூனா ஆகிய பகுதிகளில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிலிருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் கடையநல்லூர் வந்து பல்வேறு சோதனைகள செய்தனர். இதில் கடையநல்லூரில் நூற்றுக்கணக்கான வீடுகளில் நவீன கழிப்பிடங்களுக்கு செப்டிக்டேங்க் அமைக்காமல் கால்வாய், குளங்களில் நேரடியாக மனிதக் கழிவுகளை கலக்க விடுவதே நூதன காய்ச்சலுக்கு காரணம் என்று கண்டுபிடித்து அறிவித்தனர்.

இதையடுத்து அனைத்து வீடுகளிலும் செப்டிக் டேங்க் அமைக்க நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இருப்பினும் பல இடங்களில் மனிதக்கழிவுகளை கால்வாய், குளங்களில் கலக்க விடுவது தொடர்வதாலும், சாக்கடை, குப்பை கூளங்கள் அதிகரித்து வருவதாலும் கடையநல்லூரில் மீண்டும் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.

மாவடிக்கால், மேலக்கடையநல்லூர், கிருஷ்ணாபுரம், பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் நூதன காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடையநல்லூர், நெல்லை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் “பிளேட்லஸ்“ எனப்படும் அணுக்கள் குறைவதால் சிகிச்சைக்கான செலவுகள் நோயாளிகளுக்கு அதிகரிக்கிறது.

எனவே கடையநல்லூர் நகராட்சி பகுதியில் முறையாக கொசுக்களுக்கான புகை அடித்து சாக்கடை குப்பைகளை உடனுக்குடன் அகற்றி சுகாதாரத்தை மேம்படுத்தி காய்ச்சல் பரவ விடாமல் தடுக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

***************************************************